முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடைகளுக்கு மாற்று தீவனமாகும் மர இலைகள்

புதன்கிழமை, 28 ஜூன் 2017      வேளாண் பூமி
Image Unavailable

மேய்ச்சலை மையமாக வைத்து வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் புரதம் அல்லது எரிசக்தி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும். பொதுவாக வறட்சியிலும் மற்றும் கோடையிலும் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு உடல் எடை மற்றும் உற்பத்தியைக் குறைக்கின்றன. எனவே கோடை காலங்களில் பசுமை செழித்து இருக்கும் மரங்களின் இலைகளைத் தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும். மர இலைகளில் பொதுவாக 10-18 சதவீதம் புரதச்சத்தும், சுண்ணாம்பு சத்து அதிகமாகவும் மணிச்சத்து மிக குறைவாகவும் உள்ளது.

ஆடு, மாடுகளுக்கு எரிசக்தியை அளித்திடும் நார்ச் சத்தானது புற்களில் இருப்பதை விட மர இலைகளில் குறைவாகவே இருக்கின்றது. இதனால் ஆடு, மாடுகளில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். எனவே மர இலைகளையே முழுத்தீவனமாக உட்கொள்ளும் ஆடு, மாடுகளுக்கு எரிசக்தியை அளிக்கவல்ல புற்கள், வைக்கோல் போன்றவற்றைச் சேர்த்து அளிப்பதால் மர இலைகளை உட்கொள்ளும்போது ஏற்படும் எரிசக்தி பற்றாக்குறையை பெருமளவு போக்கலாம். கால்நடைகளுக்கு கோதுமை அல்லது அரிசி தவிட்டை தீவனத்தில் சேர்ப்பதால் தவிட்டில் உள்ள மணிச்சத்தானது மர இலைகளில் உள்ள சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து முழுமையாக கால்நடைகளுக்கு கிடைக்கும்.

வெள்ளாடுகளுக்கு மர இலைகளை மட்டும் தீவனமாக அளிப்பது தவறு. இவ்வாறு செய்தால், ஆடுகளின் வளர்ச்சி குன்றி, உற்பத்தி குறைவு ஏற்படும். மாறாக மர இலைகளுடன் புற்கள், வைக்கோல் போன்றவற்றையும், தவிட்டையும் சேர்த்து அளித்தால் அவற்றிற்கு ஓரளவு சமச்சீர் தீவனம் கிடைக்கும். இதனால் ஆடுகளின் உற்பத்தி அதிகரிக்கும். பொதுவாக மாடுகளுக்கு அவை உண்ணும் தழைத் தீவனத்தில் 30 சதவீதம் வரை மர இலைகளை அளிக்க வேண்டும். அதாவது, நாளொன்றுக்கு 3-4 கிலோ மர இலைகள் தேவைப்படும். அதேபோல் ஆடுகளுக்கு தழைத் தீவனத்தில் 50 சதவீதம் வரை மர இலைகள் தேவைப்படுகின்றன. அதாவது வளர்ந்த ஒரு ஆட்டிற்கு 2-3 கிலோ நாளொன்றுக்கு தேவைப்படுகின்றது.

ஒரு சில காரணங்களால் கால்நடைகள் சில மர இலைகளை விரும்பி உண்ணாது. இதுபோன்ற சமயங்களில் மர இலைகளை உண்ணப்பழக்கப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

கால்நடைகளுக்கு மர இலைகளை தீவனமாக அளிக்கும் வழிமுறைகள்

மர இலைகளை பிற புற்களுடன் சிறிது சிறிதாக சேர்த்து அளித்து கால்நடைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

காலையில் வெட்டிய மர இலைகளை மாலையிலும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்த நாள் காலை வரையிலும் வாட வைத்து பிறகு தீவனமாக அளிக்க வேண்டும்.

மர இலைகளை நிழலில் காயவைத்து அவற்றின் ஈரப்பதத்தைச் சுமார் 15 சதவீதத்திற்கும் கீழே குறைத்து பின்பு தீவனமாக அளிக்க வேண்டும்.

மர இலைகளின் மேல் சுமார் 2 சதவீதம் சமையல் உப்புக் கரைசலைத் தெளித்து பின்பு தீவனமாக அளிப்பது நல்லது. மர இலைகள் மீது வெல்லம் கலந்த நீரைத் தெளித்துப் பின்பு தீவனமாக அளிப்பது,

மர இலைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளையும் விரும்பாத ; கால்நடைகளையும் அருகருகே கட்டி வைத்து தீவனம் அளிப்பது.

கால்நடை எப்போதும் ஒரே வகையான மர இலைகளை விரும்புவது இல்லை. அதனால் பல்வேறு மரங்களின் இலைகளை அளிப்பது நல்லது

விவசாயக் கழிவு பொருட்களான வைக்கோல், சோளத்தட்டை, உலர்ந்த நிலக்கடலை கொடி போன்றவற்றுடன் மர இலைகளை அளிக்க வேண்டும்.

தீவன மர வகைகளான சூபாபுல் (எ) சவுண்டல், அகத்தி மற்றும் கிளைரிசிடியா ஆகிய மர இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதன் மூலம் தீவனம் செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே, கால்நடை வளர்ப்போரே, நீங்கள் உங்கள் கால்நடைகளுக்கு மர இலைகளை தீவனமாக அளித்து நல்ல இலாபம் அடையுங்கள்.

தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம் - 636001.
தொகுப்பு : ப.ரவி. து.ஜெயந்தி மற்றும் நா. ஸ்ரீபாலாஜி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!