முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய பள்ளிகளை அமைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒவ்வொரு தாலுக்காவிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து மாணவர்களின் கல்விக்கு உதவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

நாடு முழுவதும் இப்போது 1,209 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்படும் 25 சதவிகித இடங்கள் போக மீதம் உள்ள 75 சதவிகித இடங்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு முதன்மையான இடம் கொடுக்கப்படுகிறது. மத்திய மனிதவளத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இப்பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இப்பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்க்க முடிவதால் ஏழை, எளிய குடும்பத்தினரின் பிள்ளைகளும் இப்பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக இருக்கிறது. ஆனாலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் உள்ள பல தரப்பினரும் தங்களது குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் என நினைத்தாலும் அனைவராலும் அவர்களின் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடியவில்லை என்பது தான் உண்மை நிலை. குறிப்பாக இப்பள்ளிகளில் மத்திய, மாநில அரசு பணியில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளை சேர்ப்பது போக மீதம் உள்ள இடங்களில் மற்றவர்களின் பிள்ளைகளை சேர்க்க விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த அனைத்து தரப்பினராலும் தங்களது பிள்ளைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழல் உள்ளது.இதற்குக் காரணம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து தாலுகாக்களிலும் இப்பள்ளிகள் இல்லை. குறிப்பாக மாணவர்களும், பெற்றோர்களும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அதிக இடங்களில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது சம்பந்தமாக மத்திய அரசு முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.எனவே, மத்திய அரசு நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முன்வருமேயானால் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் இப்பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்று முன்னேற வாய்ப்பு உருவாகும்.எனவே மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 5,464 தாலுக்காக்களில் ஒவ்வொரு தாலுக்காவிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து மாணவர்களின் கல்விக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து