ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      அரசியல்
Rahul Gandhi 2020 02 13

காங்கிரஸ் மூத்த தலைவர்களின் விருப்பங்களை ஏற்று, ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.  

பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தபோதும் மீண்டும் பதவியை ஏற்க மறுத்து விட்டார். இதனால் சோனியாகாந்தி, கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். உடல்நிலை சரியில்லாத அவர் கட்சி பணிகளை கவனிக்க முடியாமல் இருக்கிறார்.  

எனவே விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே பெரும்பாலான தலைவர்கள் விரும்புகிறார்கள்.  அவரை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களால் கட்சிக்கு செல்வாக்கு பெற முடியாது என்று கருதுகின்றனர்.

இதனால் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று குரல் எழுந்தது. குறிப்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியை தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதற்கு ராகுல் சம்மதித்து விட்டதாக தெரிகிறது. எனவே அவரை முறைப்படி தலைவராக தேர்வு செய்ய உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருக்கிறது. அதில் புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து