முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மியினர் தவறு செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை: முதல்வர் கெஜ்ரிவால் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ள நிலையில், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளார். டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முன்னதாக, கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.  இதையடுத்து டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப்படையினர், அதிரடிப் படையினர் கலவரம் பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர். தற்போதுவரை லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருவரும், ஜே.பி.சி. மருத்துவனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 200-க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயமடைந்த பெரும்பாலானோர் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் பொழுது கீழே விழுந்து காயமடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலம்பூர், பார்பர்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கலவரம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து