அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: குஜராத் முதல்வருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
CM-Photo 2020 09 24

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மூடப்படுவது வருத்தமளிக்கிறது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணி நகரில் தமிழ் மேல்நிலைப் பள்ளியை தற்போது கொரோனா மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அப்பள்ளியை மூடுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் அங்குள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குஜராத்தின் மணி நகரில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதல்வரிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்த பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன். தமிழ்வழியில் கற்பிக்கும் பள்ளி மூடப்படும் செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அகமதாபாத்தில் தமிழ் வழி பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் அங்கு படிக்கும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.  தமிழக தொழிலாளர்கள் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பை அவர்கள் செலுத்தி வருகின்றனர். அகமதாபாத்தில் தமிழ் பள்ளிக்கூடம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக தமிழ்வழி பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்க தயார். தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்க வேண்டும் என்று அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து