டாக்கா : வங்காளதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்தது. முதலில் பேட் செய்த அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி 43.4 ஓவர்களில் 148 ரன்னில் சுருண்டது.
அதிகபட்சமாக ரோவ்மன் பவெல் 41 ரன்கள் எடுத்தார். வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளும், முஸ்தாபிஜூர் ரகுமான், ஷகிப் அல்-ஹசன் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 33.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. கேப்டன் தமிம் இக்பால் 50 ரன்களும், ஷகிப் அல்-ஹசன் 43 ரன்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட இந்த தொடரை வங்காளதேசம் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 25-ந்தேதி சட்டோகிராமில் நடக்கிறது.