முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 உலக கோப்பையை நடத்த அவகாசம் கேட்க பி.சி.சி.ஐ முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டி - 20 உலக கோப்பையை நடத்த மேலும் ஒருமாதம் ஐ.சி.சியிடம் அவகாசம் கேட்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சாம்பியன் பட்டம் 

டி-20 உலக கோப்பை போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6 இருபது ஓவர் உலக கோப்பை நடந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012,2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014), தலா ஒரு தடவையும் டி-20 உலக கோப்பையை கைப்பற்றின.

இந்தியாவில் நடத்த... 

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி-20 உலக கோப்பை போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அந்நாட்டில் இந்த போட்டி நடக்கிறது. 7-வது டி-20 உலக கோப்பை போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான 9 இடங்கள் குறித்து கிரிக்கெட் வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுசிலிடம் (ஐ.சி.சி.) பரிந்துரை செய்து இருந்தது.

9 இடங்களில் நடத்த...

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, லக்னோ, தர்மசாலா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இறுதிப்போட்டியை நவம்பர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

போட்டி நடைபெறுமா? 

இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் காரணமாக டி-20 உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்ய வேண்டும் என்று ஐ.சி.சி. கேட்டுக்கொண்டது.

பி.சி.சி.ஐ முடிவு...

இந்தநிலையில் டி-20 உலக கோப்பை போட்டி குறித்து மேலும் ஒரு மாத காலத்துக்கு ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்பது என்று கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:-

பொறுத்திருந்து...

டி-20 உலக கோப்பையை பொறுத்த வரை ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்டு பின்னர் முடிவு செய்வோம். தற்போதைய சூழலில் பாதுகாப்பான இடத்தில் வைத்துதான் கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோம். வரும் நாட்களில் சூழல் எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்டு அதற்கேற்ப முடிவு செய்வோம் என்பதை மட்டும் தான் தற்போது கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நாளை கூட்டம்...

ஐ.சி.சி. கூட்டம் வருகிற நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் டி-20 உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்கப்படும். இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி இதை வலியுறுத்துவார். 

அந்த இரண்டு காரணங்கள் 

கொரோனா பாதிப்பு தற்போது அதிகமாக இருப்பதால் டி-20 உலக கோப்பை குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பி.சி.சி.ஐ. அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐ.சி.சி. உலக கோப்பைக்கு மத்திய அரசிடம் இருந்து கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவும் கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து