முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: தமிழகத்தில் டீக்கடைகள், பியூட்டி பார்லர்கள் திறப்பு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி டீக்கடைகள், பியூட்டி பார்லர்கள், சலூன் கடைகள் இயங்க தொடங்கின. 

கொரோனா பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் நேற்று  (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற 21-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின்  27 மாவட்டங்களில் நேற்று முதல், டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை டீக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

பார்சல் முறையில் டீ வாங்க வரும் பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பெற்றுச்செல்லுமாறும், பிளாஸ்டிக் பைகளில் டீ பெறுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.  கடைகளின் அருகே நின்று டீ அருந்த அனுமதிக்கப்படவில்லை. 

மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு - கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் நேற்று முதல் இயங்கின. கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித்தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து