முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை  பள்ளிகள் கணக்கீடு செய்து, பதிவேற்றுவதற்கான கால அவகாசம், நாளை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தலா 30 சதவீதம், பிளஸ் 2 தேர்வுகளில் 40 சதவீதம் என்ற அளவில் இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மதிப்பெண்களைப் பள்ளிகள் பதிவு செய்வதற்கான அவகாசம் கடந்த 22-ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், ஏராளமான பள்ளிகள் இந்தப் பணிகளை முடிக்கவில்லை. இதனால் மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட அறிவிப்பில், 

பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்குப் பள்ளிகளுக்கு தரப்பட்ட அவகாசம் நாளை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.  பள்ளிகள், ஆசிரியர்களின் நலன் கருதி வழங்கப்பட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 25-ம் தேதிக்குள் மதிப்பெண்களைக் கணக்கிடாத பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியாகும். மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு சில மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதினால், அவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையே மாணவர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து