ஆப்கனில் பொதுமக்கள் பலியாவது அதிகரிக்கிறது - ஐ.நா. சபை தகவல்

Afghanistan 2021 07 27

மே மாதத்திலிருந்து ஆப்கனில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்கள் கொல்லப்படுவது மே மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த உயிரிழப்புகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம். இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் ஆப்கனில் வன்முறை 47சதவீதம் அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களில் மோதல் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அதிகமுள்ள நகரப் பகுதிகளில் இந்த மோதல்கள் பரவினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து