முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டிகை காலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாட்டில் அடுத்து வரும் பண்டிகைக் காலங்களான முகரம், ஓணம், ஜென்மாஷ்டமி, கணேஷ் சதுர்த்தி, துர்கா பூஜை ஆகிய பண்டிகைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கும், மத்திய சுகாதாரத்துறைச் செயலர் அசோக் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஐ.சி.எம்.ஆர், தேசிய நோய்த் தடுப்பு மையம் ஆகியவை அடுத்து வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவது குறித்தும், கொரோனாவைப் பரப்பும் சூப்பர் ஸ்பிரெட்டர் இடங்களாக மாறுவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.  கடந்த மாதத்திலிருந்து நாட்டில் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. சில மாநிலங்களில் மட்டுமே கொரோனா தொற்றும், பாசிட்டிவ் வீதமும் அதிகரித்து வருகிறது.  

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் மையங்களை அமைக்க கடந்த மாதம் 29-ம் தேதி உள்துறை அமைச்சகம் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.  அதன்படி, வரும் 19-ம் தேதி முகரம் பண்டிகை, 21-ம் தேதி திருவோணம், 30-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 5 முதல் 15 வரை துர்கா பூஜை போன்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் அதிக அளவு கூடலாம், அதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.

ஆதலால், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மாநில அளவில் கட்டுப்பாடுகளை விதித்து பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமான அளவில் கூடாமல் தடுக்க வேண்டும்.  பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கொரோனா பரவலுக்கு ஏற்ற இடமாக மாறிவிடும், அதன் மூலம் தொற்று அதிகரிக்கும் என ஐ.சி.எம்.ஆர், என்.சி.டி.சி. தெரிவித்துள்ளன. ஆதலால், பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, தடுப்பு வழிமுறைகள் இந்த 5 தடுப்பு வழிகளைக் கடைப்பிடிப்பதில் எந்தவிதமான தளர்வுகளையும் மாநில அரசுகள் அளிக்காமல் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு தளர்வுகள் அளித்தால் இதுவரை கட்டுப்படுத்திவந்த கொரோனா தொற்று நடவடிக்கை பயனற்று விடும். இவ்வாறு அசோக் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து