முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் ஊழல் புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தந்தை பெரியாரின் நினைவாக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை ஒன்றிணைத்து இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இந்த பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடு மற்றும் மோசடி புகார்கள் அடுத்தடுத்து எழுந்து வந்தது. குறிப்பாக, பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 154 தகுதியற்ற நபர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2014 முதல் 2017 வரை பெரியார் பல்கலை துணைவேந்தராக சாமிநாதன் இருந்தபோது பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகுதியற்ற நபர்களை தேர்வு செய்யும்படி தேர்வுக்குழுவை சாமிநாதன் மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும் எஃப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தேர்வுக் குழுவுக்கே தெரியாமல் சில நியமனங்களை துணைவேந்தராக இருந்த சாமிநாதன் செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சாமிநாதன் பதவிக்காலத்தில் பெரும்பாலான பணி நியமனங்கள் அவசரகதியில் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் பல பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமங்களுக்கு துணைவேந்தராக இருந்த சாமிநாதன் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதும் அம்பலமாகியுள்ளது. தகுதியான நபர்கள் மற்றும் அரசாங்கத்தை ஏமாற்றி சாமிநாதன் முறைகேடு செய்ததாக லஞ்சஒழிப்புத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. தகுதியில்லாத கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்ததாக சேலம் பெரியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து