முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுக்கு இந்தியா ஆதரவு

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொரோனா தோன்றியது எப்படி என்ற புதிய சர்வதேச ஆய்வுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளும் இந்த விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.  இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்று சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவின் மூலத்தை அறிய நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியேசஸ் அறிவித்தார். வூகானில் இருந்து கொரோனா பிறந்ததாகக் கூறப்படும் தகவல்களை இக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

_______________

பில் கிளிண்டனுக்கு உடல் நலக்குறைவு

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலம் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.75 வயதாகும் பில் கிளிண்டன் உடல் சோர்வு காரணமாக கலிஃபோர்னியாவின் இர்வின் -ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை சோதித்த மருத்துவர்கள், ரத்த நாளத்தில் ஏற்பட்ட தொற்றால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இப்போது அவரது உடைநிலை நல்ல முன்னேற்றத்தை காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

______________

அமேசான் காடுகளை பாதுகாக்க ஓவியம்

பிரேசிலில் காட்டுத் தீயால் நாசமாகி வரும் அமேசான் காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி எரிந்து போன அக்காடுகளின் மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைக்கொண்டு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.சாவோ பாலோவின் மிக பெரிய கட்டடத்தின் சுவரில் ஸ்ட்ரீட் ஆர்ட் முறையில், பற்றி ஏரியும் வனத்தில், இறந்த விலங்குகள் மத்தியில் தீயணைப்பு வீரர் ஒருவர் நிற்பதை போன்ற ஓவியத்தை மண்டனோ என்னும் ஓவியக் கலைஞர் தீட்டியுள்ளார்.

பிரேசில் முழுக்க சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த மண்டனோ, பல வனப்பகுதிகளிலிருந்து எரிந்த மரங்களின் சாம்பலை சேகரித்து வந்து இந்த பிரம்மாண்ட ஓவியத்தை படைத்துள்ளார்.

___________

நினைவாற்றல் பாதிப்பு: காரணம் கண்டுபிடிப்பு

அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது நினைவாற்றலைப் பாதிக்கும் என்பது எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3 மாதம் மற்றும் 24 மாதம் வயதுகளையுடைய எலிகளுக்குப் பதப்படுத்தப்பட்ட உணவைக் கொடுத்து அவற்றின் நினைவாற்றல் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

அதில் வயதான எலிகளுக்கு நினைவாற்றல் குறைந்திருந்ததும், இளம் எலிகளுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நினைவாற்றல் பாதிக்கப்படாததும் தெரியவந்துள்ளது. பதப்படுத்தும் பொருள் சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்குச் சீவல், மற்ற நொறுக்குத் தீனிகள், பஸ்தா, பிசா ஆகியன வயதானோரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவை என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

____________

இலக்கை துல்லியமாக சுடும் நாய் வடிவ ரோபோ

கிட்டத்தட்ட 4 ஆயிரம் அடி தூரத்தில் உள்ள இலக்கையும் குறிதவறாமல் சுடும் நாய் வடிவிலான ரோபோ அமெரிக்க ராணுவ வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. பிலடெல்பியாவை தளமாகக் கொண்ட கோஸ்ட் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆயுத உற்பத்தியாளர் SWORD இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளன.

எந்தச் சூழ்நிலையிலும் பதுங்கி நடந்து செல்லும் இந்த ரோபோவின் மேல் பகுதியில் உள்ள க்ரீட்மூட் ஸ்னைப்பர் வகைத் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ரோபோவின் விலை மற்றும் பராமரிப்புச் செலவு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

_____________

நார்வே: வில், அம்பு தாக்குதலில் ஐவர் பலி

வில் மற்றும் அம்பை வைத்து ஒரு நபர் தாக்குதல் நடத்தியதில் நார்வேயில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; இருவர் படுகாயமடைந்துள்ளனர். நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து தென்மேற்கே உள்ள கொங்ஸ்பெர்க் நகரில் இந்த தாக்குதல் நடப்பதாக உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6:13 தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக 37 வயதாகும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குழுவாக இயங்கினாரா அல்லது தனியாகத் தாக்குதல் நடத்தினாரா, இது தீவிரவாதத் தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து