முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
Plus-2-Exam-Results 2023-05

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கனவே அறிவிப்பு...

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள். தேர்வு எழுதி இருந்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்து முடிந்தது. ஏற்கனவே பொதுத் தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்ட போதே, தேர்வு முடிவு குறித்த தேதியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

10-ம் வகுப்பு தேர்வு...

அதன்படி, மே 6-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இடையில் அதே தேதியில் தேர்வு முடிவு வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத் துறை திட்டமிட்டபடி மே 6-ம் தேதி பிளஸ்-2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவித்ததோடு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கும் வருகிற 10-ம் தேதி பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்றும் தெரிவித்தது. அதன்படி, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 

முடிவுகள் இன்று காலை...

இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, "மார்ச் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

கட்டணமின்றி முடிவை... 

தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

குறுஞ்செய்தியாகவும்...

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து