முக்கிய செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Weather-Center 2021 06-30

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது., தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுபெறும். இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யும். 28, 29-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர். வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் இனி அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாகி மழை பெய்யக்கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து