முக்கிய செய்திகள்

முன்னாள் மிஸ் கேரள அழகிகள் இரண்டு பேர் கார் விபத்தில் பலி

திங்கட்கிழமை, 1 நவம்பர் 2021      சினிமா
Ansi-Anjana 2021 11 01

Source: provided

திருவனந்தபுரம் : எர்ணாகுளத்தில் மிஸ் கேரள அழகிகள் இருவர் விபத்தில் பலியானது மாடலிங் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர் (வயது 25). அன்சி கபீர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்து வந்தார்.கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த மிஸ் கேரளா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இவரது தோழி அஞ்சனா சாஜன் (26). திருச்சூரை சேர்ந்த இவர் ஆயுர்வேத டாக்டர். இவரும் 2019-ம் ஆண்டு நடந்த மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்தார்.

அன்சி கபீரும், அஞ்சனா சாஜனும் தோழிகள். இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 1-மணி அளவில் எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை அன்சி கபீர் ஓட்டினார். அவர்களுடன் மேலும் இரண்டு நண்பர்கள் இருந்தனர். எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்னால் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் மீது மோதாமல் இருக்க அன்சி கபீர் காரை திருப்பினார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த அன்சி கபீர், அஞ்சனா சாஜன் மற்றும் அவர்களுடன் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் விபத்து பற்றி உடனடியாக தகவல் தெரியவில்லை.அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் விபத்து பற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காரில் இருந்த மற்ற இருவரும் படுகாயங்களுடன் இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து