முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் முன்னணியில் நீலகிரி - காஞ்சிபுரம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன.

தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் நேற்றுடன் ஓராண்டை நிறைவடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 18 தடவை சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3.17 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். என்றாலும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியே உள்ளது.

தமிழகத்தில் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் காஞ்சீபுரம் முதலிடத்தில் உள்ளது. அரியலூர், கடலூர், கோவை , விழுப்புரம் மாவட்டங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் நீலகிரி மாவட்ட மக்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் 85.65 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் 81.69 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி 2-வது இடத்தில் இருக்கிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்ட மக்களில் 78.72 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 76.06 சதவீதம் பேரும், அரியலூர் மாவட்டத்தில் 74.34 சதவீதம் பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் பயனாக தமிழகத்தில் சுமார் 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3-ல் ஒருவர் தடுப்பூசி செலுத்தியவராக உள்ளனர். தேசிய அளவில் ஆய்வு செய்தததில் இதுவரை 157 கோடி தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 135 கோடி பேர் கோவிஷீல்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர். 20 கோடி பேர் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

மாநிலங்கள் பட்டியலில் இமாச்சலபிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு முதல் தவணை தடுப்பூசியை 100 சதவீதம் பேர் போட்டு உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 94.01 சதவீதம் பேர் போட்டு உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 93.04 சதவீதமாக உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 85 சதவீதம் பேரும், குஜராத்தில் 89.3 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 77.9 சதவீதம் பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மொத்தத்தில் இந்தியாவில் 64.6 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.சுமார் 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தி இருக்கிறார்கள். 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 3.50 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். 18 முதல் 44 வயது உடையவர்களில் 93 கோடி பேரும், 45 முதல் 59 வயதுடையவர்களில் 37 கோடி பேரும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் 22.6 கோடி பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

தற்போது பூஸ்டர்தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் சுமார் 13.8 கோடி பேர் நாடுமுழுவதும் உள்ளனர். இவர்களில் இதுவரை 41.7 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து