முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 3,119 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது : 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவ-மாணிவிகள் எழுதுகிறார்கள்

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
Student 2022 05 03

Source: provided

சென்னை : தமிழகத்தில் 3,119 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவ-மாணிவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வு...

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ம் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் முறையே இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.

3,119 மையங்கள்... 

இந்தநிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுத இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.10, 11, 12 ஆகிய மூன்று பொதுத்தேர்வையும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகள், மூன்றாம் பாலினத்தவர்களும் இதில் அடங்குவார்கள்.

ஆயிரம் பறக்கும் ...

தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்–பட்டுள்ளன. அரசு பொதுத்தேர்வில் எவ்வித குழப்பத்திற்கும் இடம் அளிக்காத வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.

தமிழ் தேர்வு... 

11ம் வகுப்பிற்கு இன்று தமிழ் தேர்வு நடக்கிறது. 12-ம் தேதி ஆங்கிலமும், 16ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், பேசிக் எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பேசிக் சிவில் என்ஜினீயரிங், பேசிக் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், பேசிக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டெல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செக்கரேட்டரிஷிப் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடக்கிறது.

25ம் தேதி கணிதம்...

19ந் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களும், 25ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நியூட்ரிஷன், டெக்ஸ்டெல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (வக்கேஷனல்) ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.

31-ம் தேதி இயற்பியல்...

27ம் தேதி கம்யுனிக்கேட்டிவ் ஆங்கிலம், எத்திக்ஸ் மற்றும் இந்தியன் கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோகெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் மொழி (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல் பாடத் தேர்வுகளும், 31-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து