முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் 'திரெளபதி முர்மு' இன்று வேட்புமனு தாக்கல்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      இந்தியா
Draupadi-Murmu-2022-06-23

பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு இன்று பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரெளபதி முர்மு (64) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதுபோல காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திரெளபதி முர்மு இன்று (24-ம் தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி முதலில் முன்மொழிவார் என்றும் மற்றவர்கள் வழிமொழிவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் குறித்து நேற்று கூறியதாவது, "ஜனாதிபதி தேர்தலுக்கு திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து, பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டா என்னிடம் பேசினார். எனது அமைச்சரவை சகாக்கள் ஜெகநாத் சரகா மற்றும் துகுனி சாஹு ஆகியோர் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.  இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்" என்றார். 

இப்போது இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நவீன் பட்நாயக், ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு தன் மந்திரிசபை முழு ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக அவர் கூறியதாவது, "ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். 'திரெளபதி முர்மு ஒடிசா மண்ணின் மகள்' என்றும், ஒடிசா மாநில மக்களுக்கு இது பெருமையான தருணம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து