முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டம்

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
chess- 2022 08 04

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.இந்தப் போட்டி ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்க இருக்கிறது

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஆகஸ்ட் 9ல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நிறைவு விழா நிகழ்ச்சியை ஒடிடி தளத்தில் வெளியிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

_______________

முடிவுக்கு வந்தது விசா பிரச்சனை:

அமெரிக்கா செல்லும் இந்திய வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரர்களுக்கு மட்டும் விசா கிடைக்கவே இல்லை. இரு அணிகளிலும் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அமெரிக்க செல்வதற்கான விசா கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் மீண்டும் செயிண்ட் கிட்ஸில் இருந்து ட்ரினிடாட் தீவுக்கு சென்று, அங்கு விசா பணிகளை செய்ய வேண்டியிருந்தது. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக விசா கிடைத்துவிடுமா என்பது சந்தேகமாகவே இருந்தது. 

இந்நிலையில் அனைவருக்கும் விசா கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஜார்ஜ் டவுன் நகரில் நேர்முக தேர்வு நடந்துள்ளது. இதன்பின்னர் அவசரகால விசா கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முழுவதும் ஃப்ளோரிடாவுக்கு சென்றுவிட்டனர். இந்திய அணி நேற்று புறப்பட்டு சென்றது.  இரு அணிகளும் மோதும் 4-வது டி20 போட்டி 6-ம் தேதியும் 5-வது டி20 போட்டி 7-ம் தேதியும் ஃப்ளோரிடாவில் உள்ள செண்ட்ரல் போவார்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

_______________

தங்கப் பதக்கத்தை தந்தைக்கு 

அர்ப்பணித்த பாகிஸ்தான் வீரர்

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்கமில் 2022 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் விளையாட்டு பிரிவில் பாகிஸ்தான் அணி சார்பில் ஒரே ஒரு தங்கம் மட்டுமே வெல்லப்பட்டுள்ளது. அந்தப் பதக்கத்தை வென்றவர் 24 வயதான பளுதூக்குதல் வீரர் நூ தஸ்தகிர் பட். பாகிஸ்தான் நாட்டின் குஜ்ரன்வாலா நகரை சேர்ந்தவர். இளம் வயது முதலே பளுதூக்குதலில் ஈடுபட்டு வருகிறார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி வென்றுள்ளார்.

“எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவும், பிரார்த்தனைகளும்தான் என்னை இந்த சாதனையை படைக்க செய்துள்ளது. இந்த பதக்கத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவரது 12 ஆண்டு கால உழைப்பு இந்த வெற்றிக்கு பின்னால் உள்ளது. இன்று இந்த மேடையில் நான் நிற்க காரணம் அவர்தான். நாட்டுக்காக பதக்கம் வெல்வது பெருமையான விஷயம். அதுவும் அது தங்கம் என்றால் சொல்லவே வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார். இதே பிரிவில்தான் இந்தியாவின் குர்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றிருந்தார்.

____________

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

டிக்கெட் வருவாய் ரூ.40 லட்சம் 

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் மூலம் இதுவரை ரூ. 40 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரச் செயல்பாடுகளின் தலைவரான பிரஃபுல் ஸவேரி தெரிவித்துள்ளார். 3,700-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் டிக்கெட் விற்பனையின் வாயிலாக அதிக வருவாய் ஈட்டிய செஸ் ஒலிம்பியாட் போட்டி என்ற சாதனையை சென்னை போட்டி நிகழ்த்த வாய்ப்புள்ளது. இன்னும் 5 நாட்கள் போட்டி உள்ளதால் டிக்கெட் விற்பனை வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து