முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.287 கோடி மதிப்பில் ஆயிரம் விளக்கு-புதுப்பேட்டையில் போலீசாருக்கு 1,632 புதிய வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-3 2022-08-08

ரூ.287 கோடி மதிப்பில் சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் புதுப்பேட்டையில் போலீசாருக்கு 1,632 புதிய வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ. 186 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை, புதுப்பேட்டைக்கு சென்று, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.100 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

மேலும் பெருந்துறையில் ரூ.5 கோடியே ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 32 காவலர் குடியிருப்புகள், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் காவல் நிலையம், ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கோட்டாரில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையம் என ரூ. 3 கோடியே 73 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திருச்சி சிறப்பு காவல் படை முதலாம் அணி வளாகத்தில் நிர்வாக அலுவலகக் கட்டிடம் என ரூ. 4 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல்துறை கட்டிடங்கள், அம்பாச முத்திரம் கிளை சிறைச்சாலையில் ரூ. 2 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், மணலியில் ரூ. 13 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள்.

திருப்பூர் மற்றும் அவிநாசி, பீளமேடு ஆகிய இடங்களில் ரூ. 4 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள், மணலியில் ரூ. 2 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு துறை பணியாளர்களுக்கான பாசறை கட்டிடம்; "உங்கள் சொந்த இல்லம்" திட்டத்தின் கீழ் பையூர் பிள்ளைவயல், தாரமங்கலம் மற்றும் கண்டம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ. 55 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீருடை பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் என மொத்தம் ரூ. 378 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையான ரூ.3 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சரிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் விசுவநாதன், வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து