முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைக்கால பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் 3 நாளில் பதிலளிக்க வேண்டும் : தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இ.பி.எஸ். தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், இ.பி.எஸ். தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய விண்ணப்பத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது இந்த கோரிக்கை குறித்து தெரிவித்துவிட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். அப்போது இ.பி.எஸ். தரப்பில், "இதுதொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டோம்" என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வரும் திங்கட்கிழமை மீண்டும் முறையிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று (ஜன.30) எடப்பாடி பழனிசாமி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த மனு தொடர்பான விவரங்களை ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த மனு மீது தேர்தல் ஆணையத்துக்கும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் 3 நாளில் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதுதொடர்பாக பதில் அளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

முன்னதாக ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மீதான விசாரணை மட்டுமே நடைபெறுமே தவிர அதைத் தாண்டி வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து