முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கான நியமனம் விரைவில் நடைபெறும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலீஜியம் மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்க பரிந்துரைத்திருந்தது.

நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் குறித்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனை, நீதிபதிகள் கவுல் மற்றும் ஏ.எஸ் ஒகா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார்.

கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமனம் செய்வதில் மத்திய அரசின் தாமதம் குறித்து அதிருப்தியை வெளியப்படுத்திய நீதிபதிகள் அமர்வு, இது மிகவும் முக்கியமான பிரச்சினை. மிகவும் சங்கடமான நிலைப்பாட்டை எடுக்க எங்களை நிர்பந்திக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.

முன்னதாக, கொலீஜியம் கடந்த 2022ம் ஆண்டு டிச.13ஆம் தேதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அஷானுத்தின் அமனுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகளின் பெயர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்திருந்ததது.

இவர்கள் ஐந்து பேரும் நீதிபதிகளாக பதவி ஏற்கும் பட்சத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். தலைமை நீதிபதி உட்பட சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது 27 நீதிபதிகளே உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து