முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      உலகம்
Putin 2023 07-14

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. மே மாதம் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் களமிறங்கினார். 

வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. கிரெம்ளின் ஆதரவு வேட்பாளர்கள் 3 பேர் மட்டுமே புடினுக்கு எதிராக போட்டியிட அனுமதி கிடைத்தது. அவர்களும், உக்ரைன் மீது புடின் அரசாங்கம் நடத்தி வரும் போருக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் புடின் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற நிலை இருந்தது. 

இந்நிலையில், தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. மே மாதம் பதவியேற்பு விழா நடைபெறும். 

1999 டிசம்பர் மாதத்தில் இருந்து அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகித்து ரஷ்யாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் புடின் என்பது குறிப்பிடத்தக்கது.  

தேர்தலில் மெகா வெற்றியை பெற்றதை தொடர்ந்து புடின் ஆற்றிய முதல் உரையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழலை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே. 

சிறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னியை நான் விடுதலை செய்யவே விரும்பினேன். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேற்கத்திய நாடுகளின் சில சிறைகளில் இருக்கும் ரஷ்ய கைதிகளுக்கு மாற்றாக நவால்னியை விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அவரது மறைவு எதிர்பாராதது. ஆனால் அதை சிலர் விமர்சிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது மிகப்பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிலவுகிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைச்சுவையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து