முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
ADMK-DMDK 2024-03-05

Source: provided

சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும்,  நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில்,  அ.தி.மு.க. – தே.மு.தி.க. இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 1-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையும் ,  6 ம் தேதி 2 ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்த பேச்சுவாரத்தையில் தே.மு.தி.க.வுக்கு வடசென்னை,  கள்ளக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. தயாராக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னைக்கு பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தே.மு.தி.க. கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில் இழுபறி நீடித்து வந்தது.  இந்நிலையில், அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும்,  நாளை கையெழுத்தாகவுள்ளதாகவும்,  தே.மு.தி.க. கேட்ட 4 மக்களவை தொகுதியை ஒதுக்க அ.தி.மு.க. இசைவு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. தே.மு.தி.க. சார்பில் போட்டியிட இன்றும், நாளையும் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும், மனுக்களை பூர்த்தி செய்து 20ஆம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து