முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழிசை ராஜினாமா ஏற்பு: ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2024      இந்தியா
CP-Radha-Krishnan 2024-03-1

Source: provided

புதுடெல்லி : தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார். 

இதற்கான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கினார். தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் தென்சென்னை அல்லது திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று தமிழக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழிசை தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஜார்க்கண்ட்  மாநில கவர்னராக  உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்புகளை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து