முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 6-வது லீக்: பெங்களூரு த்ரில் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2024      விளையாட்டு
IPL 2024-01-20

Source: provided

பெங்களூரு : ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியுடன்...

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 25) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் கிங்க்ஸ் அணி மோதியது.

176 ரன்கள்...

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்கள் விளாசினார்.இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் வெளியேற, விராட் கோலி பொறுப்புடன் விளையாடினார். 49 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய விராட், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பெங்களூரு வெற்றி...

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கைகோர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த லோம்ரோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரி, சிக்ஸ் என விளாசிய இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இறுதியாக 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. 77 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து...

இந்நிலையில் விராட் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவற விட்டதால் அதற்கு தண்டனையாக தோல்வி கிடைத்ததாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது நல்ல போட்டியாக அமைந்தது. நாங்கள் போட்டியை மீண்டும் எடுத்து வந்தோம். ஆனால் கடைசியில் தோற்றோம். நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்தோம். குறிப்பாக முதல் 6 ஓவர்களில் நான் சற்று மெதுவாக விளையாடினேன். அந்த 10 - 15 ரன்கள் போலவே, கேட்ச்சும் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி 70-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தார்.

தவற விட்டோம்.... 

நாங்கள் அவரைப் போன்ற ஒரு வீரரின் கேட்சை தவற விட்டோம். அதற்கான விலையை நாங்கள் கொடுத்தோம். ஒருவேளை நாங்கள் அந்த கேட்சை பிடித்திருந்தால் 2-வது பந்திலேயே போட்டி எங்கள் பக்கம் திரும்பியிருக்கலாம். ஆனால் அங்கேயே திருப்பு முனையை தவறவிட்டோம். அதற்கு விலையாக வெற்றியை நாங்கள் கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து