முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
Thirumavalavan 2024-03-27

Source: provided

அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அவர் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு அசையும் சொத்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 93 உள்ளது என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். 

முன்னதாக அவர் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க., கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். 

30-ம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கூறியிருக்கிறார்.தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை, பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. 

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல் நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும்.  அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். 

ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். 

ஆகவே தமிழகத்தில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும். நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன்.

உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன், தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள். மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராக தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். 

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம் முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து