முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்      அரசியல்
Thirumavalavan 2024-03-27

சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. மொத்தம் 900-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கியது. இதையடுத்து, கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். குறிப்பாக, நேற்று முன்தினம் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியோடு நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்றும் ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்தது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் மார்ச் 25-ம் தேதி மனுக்களை அளித்தனர். அதனால், ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 402-ஆக இருந்தது. அதில், ஆண்கள் சார்பில் 341 மனுக்களும், பெண்கள் தரப்பில் 61 மனுக்களும் தாக்கலாகின. 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30  என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.  

இந்நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்கிடையே நேற்று மத்திய சென்னையில் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அப்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,  மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், காங். சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி ஆகியோர் உடனிருந்தனர்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்தங்கனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் – திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நெல்லை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் முன்னாள் அமைச்சர் பி பி எம் மைதீன் கான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் முன்னிலையில் நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ஆர்.சுதா, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதியிடம் வேட்பமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன் உடனிருந்தனர்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அவருடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், தனக்கு பயிற்றுவித்த பள்ளி ஆசிரியருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அரக்கோணம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் கே.பாலு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிடி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது அதிமுக எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து