முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளராக துரைவைகோ களமிறங்கியுள்ளார். இதனிடையே, தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆனால், பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி ம.தி.மு.க. வேட்பாளர் விண்ணப்பித்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை.

இதையடுத்து, தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதனிடையே, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்கமுடியாது என்று ம.தி.மு.க.வுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் நேற்று பதில் அளித்துள்ளது. மேலும், ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொதுசின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடாததால் பம்பர சின்னத்தை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்கிறோம் என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. மேலும், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என்று கூறிய சென்னை ஐகோர்ட் ம.தி.மு.க. தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து