முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில் 5-ம் தேதி அமித்ஷா பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      தமிழகம்
Amit-Shah 2023-11-17

Source: provided

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் அமித்ஷா வரும் 5-ம் தேதி பிரசாரம் செய்கிறார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வருகிற 5-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 5-ம் தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும். ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.

மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து