முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் கல்வி ஆண்டு முதல் ‘நெட்’ மதிப்பெண் மூலம் பி.எச்.டி. சேர்க்கை: யு.ஜி.சி

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      இந்தியா
UGC-NET

புதுடெல்லி, 2024-25 கல்வியாண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான சேர்க்கை நடத்தப்படும் என யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

2024-25 கல்வி ஆண்டில் இருந்து தேசிய தகுதித் தேர்வு (நெட்) மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான (பி.எச்.டி) சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) தெரிவித்துள்ளது.  பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது; “2024-25 கல்வி ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நெட் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பி.எச்.டி பட்டத்துக்கான சேர்க்கையை மேற்கொள்ளலாம்.  இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்த்துவிட்டு ஒரே முறையின் கீழ் சேர்க்கை நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது.

இருமுறையில் ஏதேனும் ஒருமுறை பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரலாம்.  இந்த நடைமுறை நாட்டில் நல்ல கல்விச் சூழலை மேம்படுத்துவதோடு அறிவுசார்ந்த முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்” இவ்வாறு யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து