முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையை அவர் படித்ததாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி கவர்னர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று காலை கவர்னர் ஆர்.என். ரவி வருகை தந்தார்.முதலில் தமிழ்த் தாய் பாடல் இசைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சிறிது நேரம் கவர்னர் காத்திருந்த நிலையில், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த கவர்னர், நான் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறியும் அதைப் பின்பற்றாததில் வருத்தம் இருப்பதாக தெரிவித்துவிட்டு, பேரவையைவிட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை மரபுப்படி, கவர்னர் உரைக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம் என்று அப்பாவு தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையை அவர் படித்ததாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அப்பாவு அறிவித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு அளித்த உரையை ஆளுநா் முழுமையாக வாசிக்கவில்லை. 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் கவர்னர் ஆா்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிா் முன்னேற்றம், மதச்சாா்பின்மை, சுயமரியாதை, பெரியாா், அம்பேத்கா், கலைஞா் ஆகிய வாா்த்தைகளை அவா் வாசிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு உரையில் அந்த வாா்த்தைகள் இடம்பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றாா்.

2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடா்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் சென்றாா். பின்னா், தமிழில் அந்த உரையை பேரவைத் தலைவா் அப்பாவு வாசித்து அவைக் குறிப்பில் பதிவு செய்தாா். இதேபோல், கடந்த 2025-ஆம் ஆண்டும் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி கவர்னர் ஆா்.என்.ரவி வெளியேறினாா். தொடர்ந்து, அவர் 4-வது ஆண்டாக வெளியேறியுள்ளார்.

கவர்னர் வெளியேறிய நிலையில், முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என அண்ணா கூறியிருந்தார். கவர்னர் வேண்டும் என்றே அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயலை செய்துள்ளார். அண்ணா, கருணாநிதி வழியில் இருந்து நானும் விலகவில்லை. கவர்னர் ஏற்கனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்திற்குரியது. 

கவர்னரின் செயல்பாட்டை ஒருநாள் நடவடிக்கையாகக் கடந்துவிட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரையாற்றுவது என்ற நடைமுறையை திருத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். உரையை கவர்னர் படித்ததாக இந்த அவை கருதுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை என்பதையே விலக்க, பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.”இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து