முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கிறார் இலங்கை அமைச்சர்

புதன்கிழமை, 21 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

ஜெனீவா, மார்ச். - 21 - அமெரிக்க ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளதால் பீதியடைந்துள்ள இலங்கை, தனது வெளியுறவு துறை அமைச்சர் பெரீஸை மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து இந்திய அரசை சமாதானப்படுத்தி தங்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே தனது வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையே அமெரிக்கா களம் இறக்கியுள்ளதால் இலங்கை மேலும் வெறுப்படைந்துள்ளதாம்.  இலங்கைக்கு எதிரான தனது பிடியை அமெரிக்கா படு வேகமாக இறுக்கி வருவதாக தெரிகிறது. இலங்கைக்கு எதிரான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அப்படியே பெறும் வகையில் தனது நடவடிக்கைகளை வியாபித்து மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா. முதலில் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் ஆதரவை தற்போது உறுதிப்படுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் இலங்கை எந்த வகையிலும் தனது ஆதரவு நிலையை சீர்குலைத்து விடக் கூடாது என்ற நோக்குடன் 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஜெனிவாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.  இந்த நிலையில் தற்போது வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையே நேரடியாக களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஹிலாரியே களமிறங்கியிருப்பதால் அமெரிக்கா, இலங்கை குறித்து படு தீவிரமான நிலையை எடுத்துள்ளதாக கருத்தில் கொள்ளப்படுகிறது. இதனால் இலங்கை பெரும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளது. இந்த நிலையில்தான் தீர்மானத்தில் என்ன உள்ளது என்று தெரியாவிட்டாலும் கூட அதை ஆதரிப்போம் என்று பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பேசினார். இது இலங்கைக்கு மற்றொரு அடியாக வந்து சேர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்த அந்த நாட்டு அரசு எஸ்.எம். கிருஷ்ணா மூலம் மத்திய அரசை சமாதானப்படுத்த முடியுமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளதாம். இதற்காக தனது வெளியுறவு துறை அமைச்சர் பெரீஸை ஜெனீவாவுக்கு இலங்கை அரசு அனுப்பி வைத்துள்ளது. அங்கு வரும் கிருஷ்ணாவை பெரீஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம். அப்போது தனக்கு ஆதரவு தருமாறு கிருஷ்ணாவிடம் பெரீஸ் வேண்டுகோள் விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா உறுதிபட முடிவு செய்து விட்டால் இந்தியா சரியான சில நாடுகளும் கூட இலங்கைக்கு எதிராக திரும்பலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே இலங்கைக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமெரிக்க நாடுகள் சிலவும் கூட தீர்மானத்தை ஆதரிக்க போவதாக அறிவித்துள்ளன. குறிப்பாக, நமீபியா, காமரூன் ஆகிய நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இப்படியாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு படு வேகமாக அதிகரித்து வருவதால் இலங்கை என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்