பதக்கம் வென்ற சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹைதராபாத்,ஆக.21 - ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்த சாய்னா நேவாலுக்கு  பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. காரின் சாவியை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் சாய்னாவிடம் வழங்கினார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் சாய்னா நேவாலுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்படும் என்று ஆந்திர மாநில பேட்மிட்டன் சங்கத்தின் துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரிநாத் அறிவித்திருந்தார்.

இதன்படி, ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்றார். ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக பதக்கம் வென்று பெருமை சேர்த்த சாய்னாவுக்கு ஏற்கனவே அறிவித்தபடி, ஆந்திர மாநில பேட்மிட்டன் சங்கம் சார்பில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்த விழாவில் சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. பரிசு வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் சாவியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாய்னாவிடம் வழங்கினார்.

விழாவில் பேசிய சச்சின், கடும் உழைப்பால், தன்னம்பிக்கையால் ஒலிம்பிக்கில் நம் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெரும் பெருமை சேர்த்துள்ள அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். இந்த தருணத்தை மிகவும் பெருமையாக உணர்கிறேன், என்று கூறினார்.

சாய்னாவுக்கு வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் கடந்த மாதம்தான் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: