முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும் - ஜெயலிதா பேட்டி

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.11 - தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் தான் இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம். தமிழகம் வாழவேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி முறியடிக்கப்படவேண்டும் என்று ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய தொகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் முடிந்து இல்லம் திரும்பிய ஜெயலலிதா நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தங்களை ஊழல்வாதியென்று கருணாநிதி கூறி வருகிறாரே?

பதில்:- அதற்கு திரும்ப திரும்ப பதில் அளித்து சோர்ந்து விட்டேன். நான் ஊழல்வாதி அல்ல. என்மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும், வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்குகள். 

கேள்வி:- பிரணாப்முகர்ஜி தமிழக நிதி நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளாரே?

பதில்:- தமிழக நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விவசாயம், தொழில்த்துறை சார்ந்த விஷயங்களில் மிகவும் மோசமாக உள்ளது. பிரணாப்முகர்ஜி தமிழக நிலைமை தெரியாமல் பேசியுள்ளார்.

கேள்வி:- நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. மீது ஊழல் வழக்கு போடுவீர்களா?

பதில்;- முதலில் தேர்தலில் வெற்றி பெறவேண்டும். அதன்பின் அந்த பிரச்சினை சம்மந்தமாக தீவிரமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

கேள்வி:- 6-வது முறையாக முதல்வர் ஆவேன் என்று கருணாநிதி கூறி வருகிறாரே?

பதில்:- அது அவரது விருப்பம். தமிழக மக்களின் விருப்பம் வேறாக உள்ளது. தமிழக மக்கள் மீண்டும் கருணாநிதி முதல்வராக வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

கேள்வி:- இந்த தேர்தல் உங்கள் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டமா?

பதில்:- எங்களுக்கு அல்ல. தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் தான் இது வாழ்வா? சாவா? என்ற போராட்டம். தமிழகம் வாழவேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி முறியடிக்கப்படவேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்