முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலர் பந்தில் பகல், இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த ஐ.சி.சி.அனுமதி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

துபாய், அக். - 31 - சர்வதேச அளவிலான ஒருநாள் மற்றும் 20 - 20 போட்டிகளை போல, டெஸ்ட் போட்டிகளையும் பகல், இரவு போட்டியாக நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐ.சி.சி) அனுமதி அளித்துள்ளது. மேலும் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சில விதிமுறை மாற்றங்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது. சர்வதேச அளவிலான ஒருநாள் மற்றும் 20- 20 போட்டிகள் தற்போது பகல், இரவு போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகள் பழைய பாணியில் பகலில் மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே டெஸ்ட் போட்டிகளையும், பகல், இரவு போட்டியாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து ஐ.சி.சி செயற்குழு ஆலோசித்து தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி ஒருநாள் மற்றும் 20 - 20 போட்டிகளிலும் சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளும் இரு அணிகளும் சம்மதம் தெரிவித்தால், பகல், இரவு போட்டியாக நடத்தலாம். போட்டியின் ஒரு நாள் ஆட்டநேரம் 6 மணி நேரம் மட்டுமே இருக்கும். அதேபோல போட்டியில் வீசப்படும் பந்தின் நிறம், வகை, தரம் ஆகியவற்றை போட்டியில் கலந்து கொள்ளும் இரு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஐ.சி.சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இருந்து அமல்படுத்தப்படும். புதிய விதிமுறைகளின் படி ஒருநாள் போட்டியில் பவர் பிளை கடைப்பிடிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இனிமேல் போட்டிகளில் 3 பவர் பிளேக்கு பதிலாக 2 பவர் பிளே மட்டுமே இடம் பெறும். ஆட்டம் பாதிக்கப்படாத நிலையில் முதல் பவர் பிளே முதல் 10 ஓவர்களுக்கு உள்ளேயும், 2 வது பவர் பிளே 40 ஓவர்களுக்குள்ளேயும் முடிக்க வேண்டும். முதல் பவர் பிளேயில் 30 அடி வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்களும், 2 வது பவர்பிளேயில் 30 அடி வட்டத்துக்கு வெளியே 3 பீல்டர்களும் மட்டுமே நிற்க வேண்டும். பவர் பிளே இல்லாத ஓவர்களில் பீல்டிங் கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியில் 4 பீல்டர்களுக்கு மேல் நிற்க கூடாது. டி.ஆர்.எஸ். முறையில் நோ-பாலை அம்பயர் கவனிக்காமல் ஒரு வீரர் ஆட்டம் இழந்து வெளியேறினால், 3 வது அம்பயர் தொழில்நுட்ப உதவியுடன் கவனித்து திரும்ப பேட்டிங் செய்ய அழைக்கலாம். ஒருநாள் போட்டியில் ஒரு ஓவரில் ஷாட் பிட்ச் பந்து ஒன்றுக்கு பதில் இனிமேல் 2 பந்துகள் வீசலாம். 20 - 20 போட்டியில் ஆட்டம் டையில் முடிந்தால் சூப்பர் ஓவரை எந்த விக்கெட் திசையில் இருந்து பந்து வீசலாம் என்பதை பீல்டிங் அணியின் கேப்டன் முடிவு செய்யலாம். அதேபோல் சூப்பர் ஓவரில் புதிய பந்து பயன்படுத்த கூடாது. பழைய பந்துகளில் எதை பயன்படுத்தலாம் என்பதை பீல்டிங் செய்யும் அணியின் கேப்டன் தேர்வு செய்யலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் மூலம் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பு மிகுந்ததாக இருக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்