முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்டிலும் சதம்: புஜாராவுக்கு அஸ்வின் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 25 - 2 வது டெஸ்டிலும் சதம் அடித்த புஜாராவுக்கு தமிழக வீரர் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்த இருவரும்தான் நேற்று இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்தியா - இங்கிலாந்து 2 வது டெஸ்ட் நேற்று மும்பையில் தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் இந்தியா தடுமாறியது. ஆனால் 3 வது வீரராக களமிறங்கிய புஜாராவும், 7 வது வீரராக களமிறங்கிய அஸ்வினும் தடுத்து நிறுத்தினார்கள். இந்த இருவரும் கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. புஜாரா 114 ரன்களை அடித்தார். அஸ்வின் 60 ரன்களை சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும் அடங்கும். 

புஜாரா குஜராத்தை சேர்ந்தவர். அகமதாபாத் நகரில் நடந்த முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்தியா அதிக ரன்களை சேர்க்க அடித்தளமிட்டார். அந்த போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றது. இதில் அவரது பங்கு மிக முக்கியமானது. நேற்றும் அவர் சிறப்பாக ஆடியதால் தான் கவுரவமான ரன்களை இந்தியாவால் எட்ட முடிந்தது. 

ஆகவே அவரை அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 

புஜாரா மிக சிறந்த வீரர். அவருடைய ஆட்டம் மிகவும் நேர்த்தியானதாக உள்ளது. தடுப்பாட்டத்தில் வல்லவர். இவர் மட்டும் நேற்று சதம் அடித்திருக்காவிட்டால் இந்திய அணியின் நிலைமை மோசமாகி இருக்கும். நாங்கள் இருவரும் தேசிய கிரிக்கெட்டில் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அதனால் அவர் சிறந்த நண்பர். உள்ளூர் ஆட்டங்களில் அவருக்கு எதிராக நான் பந்து வீசி இருக்கிறேன். அவரை அவுட்டும் செய்திருக்கிறேன். 

அகமதாபாத் மைதானத்தில் பந்து அவ்வளவாக எழவில்லை. ஆனால் மும்பை மைதானத்தில் மிக உயரமாக எழும்புகிறது. ஆகவே பந்தை எதிர்கொள்வது சிரமமாக இருக்கிறது. நாளைய பொழுது மிக முக்கியமானது. நாங்கள் இருவரும் சேர்ந்து 350 ரன்கள் வரை கொண்டு வந்து விட்டால் இந்திய அணிக்கு பெரிய சிரமம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்