முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சிக்கு இன்று திருக்கல்யாணம்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.16 - சித்திரை திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கல்யாண காட்சியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளுகிறார்கள். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் தினந்தோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது இந்த கோவிலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் திருவிழாக்களில் சித்திரை திருவிழாவும்,திருக்கல்யாணமும் தான் பிரசித்தி பெற்றது. நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. திக் விஜயம் நடைபெற்றது. மீனாட்சி திக்விஜயம் செய்து உலகையெல்லாம் வென்று, இறைவனின் மனதையும் வென்ற அன்னை மீனாட்சிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தை காண விண்ணுலகமே மண்ணுலகத்திற்கு வந்தது. மணமகன் சுந்தரேசுவர கடவுளை வரவேற்க பிரம்மாவும், திருமாலும் மதுரைக்கு முன்கூட்டியே வந்தனர். சுமங்கலிப்பெண்கள் பூரண பொற்கலசம் ஏந்தி மங்கல தீபத்தோடு அணிவகுத்து நின்றனர். பெண்ணின் தந்தை மலையத்துவஜ பாண்டிய மன்னனும், தாய் காஞ்சனமாலையும் மாப்பிளைக்கு பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து என் மகளை மணந்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

    பிரம்மா முன்னின்று யாக வேள்வியை நடத்துகிறார்.  கலைமகளும், அலைமகளும், மலைமகளாகிய அன்னை மீனாட்சியை அலங்காரம் செய்து மணவறைக்கு அழைத்து வருகிறார்கள். வேதமந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் மீனாட்சி கழுத்தில் சுந்தரேசுவரர் மங்கல நாணை பூட்டுவதாக வரலாறு கூறுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா  கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமியும் அம்மனும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் 10 ம் நாளான இன்று மாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. காலை 10.30 மணியில் இருந்து 10.59க்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப் பெருமான் புறப்பட்டு மதுரைக்கு வந்து விட்டார். கோவிலில் வடக்காடி வீதியில் மலர்களான ஆன மண மேடை அமைக்கப்பட்டுள்ளது. வடக்காடி மற்றும் தெற்காடி வீதிகளில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்திற்காக சுமார் 16 ஆயிரம் பேருக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோவில் சார்பில் திருக்கல்யாணம் முடிந்ததும் திருமாங்கல்ய கயிறும், மஞ்சள் கிழங்கும் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. திருக்கல்யாணம் முடிவடைந்ததும் சாமியும், அம்மனும் ஊர்வலமாக  புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு வருகிறார்கள். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு கல்யாண கோலத்தில் காட்சியளிக்கிறார்கள்.திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை யொட்டி ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட   போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாஸ் வைத்திருக்கும் பக்தர்கள் காலை 7.30 மணிக்குள் கோவிலுக்குள் வந்து விடவேண்டும் என்றுஏ  கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சிறிய தேரில் மீனாட்சியும், பெரிய தேரில் சுந்தரேசுவரர்-ப்ரியாவிடையும் எழுந்தருளுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்