முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு தழுவிய அளவில் இன்று வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 20  - வங்கித் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்கிப்பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வங்கித் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் சட்டத் திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வங்கிகள் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவது, போட்டியைக் கண்காணிக்கும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வங்கித்துறைக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட இரு பிரிவுகளும் இந்த மசோதாவில் இடம் பெற்றிருந்தன. ஆனால்,எதிர்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, இந்த இரு பிரிவுகளையும் நீக்குவதற்கு அரசு ஒப்புக் கொண்டது. எனினும், இடதுசாரிகள் முன்வைத்த வேறு சில திருத்தங்களை அரசு நிராகரித்தது. 

இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 'வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா என்ற இந்த மசோதா, புதிய தனியார் வங்கிகளை நிறுவுவதற்கும் வகை செய்கிறது. சர்ச்சைக்குரிய மற்றொரு மசோதாவான,நிலம் கையகப்படுத்துவது தொடர்பான மசோதா, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார். 

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக 6 ஆயிரம் வங்கிக் கிளைகள் ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்படும் என்றும், இந்த நிதியாண்டில் 84 ஆயிரத்து 500 ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கிகளை இணைப்பதற்கு எதிராகவும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ்ஈடுபடுவதாக, பொதுத் துறை வங்கிகளின் நான்கு முக்கிய சங்கங்கள் அறிவித்துள்ளன. 

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய சங்கம் ஆகியவை இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் ஐந்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிச்சேவைகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்