முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ராஜசுலோசனா மறைவு: ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.6 - பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா மறைவு குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.     

ராஜசுலோச்சனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்​அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- பழம்பெரும் திரைப்பட நடிகை ராஜசுலோச்சனா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரண மடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அரசிளங்குமரி, படித்தால் மட்டும் போதுமா வணங்காமுடி போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற ராஜசுலோச்சனா 275​க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ் குமார் போன்ற முன்னணி திரைப்பட நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். சென்னையில் புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்' என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

திரைப்படத் துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் ராஜசுலோச்சனா. இவர் தனது அபார நடிப்பின் மூலம் திரைப்பட உலகில் புகழின் உச்சியை எட்டியவர். இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அனைவருடனும் அன்புடன் பழகும் தன்மையானவர்.

ராஜசுலோச்சனாவின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும். ராஜசுலோச்சனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

இவ்வாறு முதல்​ அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!