ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு?

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 18 - கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கி எடுத்திருக்கிறது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 கிரிக்கெட் வீரர்கள் சிக்கிய ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் விவகாரம். இதில் ஒரு சோக சுவராசியமும் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் டெல்லி காவல்துறையின் முக்கிய அதிகாரி இறந்துபோகிறார். அவரது மரண விசாரணையில் இந்த ஸ்பாட்பிக்சிங் விவகாரமே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

பத்ரீஷ் தத் டெல்லி போலீசாரால் கொண்டாடப்படுகிற அதிகாரிகளில் ஒருவர் பத்ரீஷ் தத். பயங்கரவாத தடுப்பு பிரிவில் தகவல் தொடர்பு சாதனங்களை இடைமறித்துக் கேட்கும் பிரிவின் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றியவர். இவர் அளவுக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை இடைமறித்து தகவல்களை துல்லியமாக துப்பறிய முடியாது என்பது டெல்லி போலீசின் கருத்து. 

இவர்தான் கடந்த மே 11 ம் தேதி டெல்லி புறநகரான குர்கான் பகுதியில் தமது லிவிங் பார்ட்னர் கீதா ஷர்மாவுடன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். பத்ரீஷ் தத்தின் மனைவி பரிதாப்பாத்தில் வசித்து வருகிறார். அவருக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக பத்ரீஷ் சந்தேகப்படுகிறார். தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிற கீதா ஷர்மாவை சந்தித்துப் பேசுகிறார். கீதா ஷர்மா கணவனை இழந்த விதவை. இதில் இருவருக்கும் நெருக்கமாகி ஒரே வீட்டில் தங்கி வாழவும் செய்தனர். 

இந்த நிலையில்தான் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஏதோ ஒரு தகராறில் பத்ரீஷ் தமது அலுவலக துப்பாக்கியால் கீதா ஷர்மாவை சுட்டுக் கொன்றுவிட்டு தம்மையும் சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். முதலில் பத்ரீஷ் தத்தின் மரணம் டெல்லி போலீசாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர் இடைமறித்துக் கேட்ட தொலைபேசிகள் அனைத்தும் பல விஷயங்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. அவர் இடைமறித்துக் கேட்டிருந்த தொலைபேசி அழைப்புகள், இதர தகவல் தொடர்பு சாதனம் வழி தகவல் பரிமாற்றங்களில் பெரும்பாலானவை பாகிஸ்தான், மும்பை, டெல்லி ஆகியவற்றையே மையப்படுத்தி இருந்திருக்கின்றன. இவை கடந்த ஒன்றரை மாத காலமாக கண்காணிக்கப்பட்டு வந்தவை. இது ஐ.பி.எல். மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் ஆகியவற்றுக்காக பேசப்பட்டது என்பது தெரியவர இந்த தகவலை வைத்தே அடுத்த கட்ட விசாரணையில் போலீசார் குதித்து விட்டனர்.. சிக்கிய புக்கிகளும் ஸ்ரீசாந்தும் இந்த தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் டெல்லியில் 3 புக்கிகளையும் மும்பையில் 7 புக்கிகளையும் கைது செய்தனர் போலீசார். 

பின்னர் அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்ற நாளில் நண்பர் ஒருவரது வீட்டில் இருந்து ஸ்ரீசாந்த் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் டிரைடண்ட் ஹோட்டலில் அதிகாலை 2.30 மணிக்கு மற்ற இரண்டு வீரர்களையும் கைது செய்தனர். இதில் இடைத்தரகர்களில் ஒருவராக ஸ்ரீசாந்தின் உறவினர் ஒருவரும் செயல்பட்டது தெரியவந்துள்ளது. மற்ற இரண்டு வீரர்களையும் ஸ்பாட் பிக்சிங் மோசடிக்கு கொண்டு வந்ததில் ஸ்ரீசாந்த்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மும்பையில் 7 புக்கிகள் கைது செய்யப்பட்டிருப்பதும் அவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்திருப்பதாலும் அனேகமாக பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பிருக்கலாம் என்பது போலீசாரின் சந்தேகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: