முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

வத்தலக்குண்டு, செப்.16 - வத்தலக்குண்டு ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.திண்டுக்கல் வத்தலக்குண்டு கடைவீதியில் குருசாமி டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தவர் விநாயகமூர்த்தி. இந்த கடையினை இவரும் இவரது சகோதரர் சுகுமாறனும் கவனித்து வந்தனர். இவர்களுக்கு இதுதவிர உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும் ஜவுளிக்கடைகள் உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு சுகுமாறன் தனது வீட்டிற்கு சென்று விட்டார். 

அதிகாலையில் இந்த கடையின் 3வது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான பட்டுசேலைகள் மற்றும் ஜவுளிகள் எரிந்தது. மேலும் அந்த தீ சிறிது நேரத்தில் 2வது தளத்திலும் பரவியது. இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் ஜவுளிகள் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த தீவிபத்து மின்கசிவினால் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீயணைப்பு நிலைய வீரர்கள் சாமர்த்தியமாக தீயை போராடி அணைத்ததால் தீ வேறு கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. கடைவீதியில் நடந்த இந்த தீவிபத்தால் வத்தலக்குண்டு நகரில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்