முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு இன்று கூடுகிறது

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை.டிச.19 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு_பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன் று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம்.அந்த வகையில், விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி வருகின்றன. தற்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. 

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 15_ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசாரிடம் கிலியும், நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. யாரோடு கூட்டுச்சேர்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வில் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை விட்டே விலகியதை தொடர்ந்து, அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் கடந்த 12_ந்தேதி நடைபெற்றது.கூட்டத்தில், அவைத்தலைவர் பதவியை நீக்க முடிவு செய்யப்பட்டதுடன், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல பா.ஜ.க. தரப்பிலும் கூட்டணிக்கான முயற்சிகள் நடந்து வருகிறது. சிறிய கட்சிகளை சேர்த்துக்கொண்டு தமிழகத்தில் தேர்தலை சந்திக்கலாம் என்று அது கருதுகிறது. 

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் இன்று  (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. 

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, டெல்லி அரசியலில் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிரமாக உள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

மத்திய அரசு செய்து வரும் தவறுகளை முதல்_அமைச்சர் ஜெயலலிதா துணிச்சலுடன் சுட்டிக்காட்டி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.

பெட்ரோல், டீசல், விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறியது போன்றவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு_ பொதுக்குழு கூட உள்ளது. 

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்_ அமைச்சர் ஜெயலலிதா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பற்றிய அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்_அமைச்சருமான ஜெயலலிதா ஏற்கனவே வெளியிட்டுள்ளார். அதில் அவர், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 19.12.2013 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்_அமைச்சருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் முதல்_அமைச்சர் ஜெயலலிதா விளக்கி பேசுகிறார்.

கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கவும், பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்