முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் 2ஜி உரிமம் - தயாநிதி மாறனுக்கு பா.ஜ.க கேள்வி

புதன்கிழமை, 1 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் 1- ஏர்செல் தொலைத் தொடர்பு கம்பெனிக்கு 2 ஜி. உரிமத்தை அளித்ததில் தயாநிதி மாறனுக்கு பங்கு இருப்பதாக கூறப்படுவது குறித்து அவர் மீது பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது. இது தொடர்பாக தயாநிதி மாறன் விளக்கமளிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

டெகல்கா இணையதள இதழின் தகவல்படி கடந்த 2006 ம் ஆண்டு சில செல்போன் கம்பெனிகளுக்கு உரிமம் வழங்குவதை அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் வேண்டும் என்றே தாமதம் செய்தார் என்று கூறப்படுகிறது. தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான டி.வி.யில் முதலீடு செய்துள்ள மாக்ஸிஸ் என்ற கம்பெனியுடன் வலுக்கட்டாயமாக ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்காகத்தான் தயாநிதி மாறன் இந்த தாமதத்தை ஏற்படுத்தினார் என்று டெகல்கா இணையதளம் கூறியுள்ளது. 

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாம் இப்போது தயாநிதி மாறனிடம் கேட்கக்கூடிய முக்கியமான கேள்வி என்னவென்றால், அவரது குடும்பத்திற்கு சொந்தமான டி.வி.யில், மாக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கணிசமான முதலீடு ஏதேனும் செய்திருக்கிறதா? என்பதுதான் என்றார். 

இரண்டாவதாக, அந்த முதலீடு ஏர்செல் கம்பெனியை மாக்ஸிஸ் கம்யூனிகேஷன் விலைக்கு வாங்கியதற்கு முன்பா? அல்லது பிறகா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது உண்மையென்றால், இந்த விஷயத்தில் இவர் நேரடியாக ஈடுபடவில்லையா? என்றும் பிரசாத் வினா எழுப்பினார். ஏனென்றால் மத்திய அமைச்சரவைக் குழுவின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு தயாநிதி மாறனின்  வற்புறுத்தலின்பேரில் இந்த உரிமம் வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார். எனவே இதுபோன்ற முக்கியமான கேள்விகளுக்கு தயாநிதி மாறன் பதில்சொல்ல வேண்டும் என்றும் பிரசாத் கேட்டுக்கொண்டார். தேச நலன்கருதி தயாநிதிமாறனின் இந்த பதில் முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்