முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ் விலை ரூ.800 ஆகிறது மத்திய அரசு பரிசீலிக்கிறதாம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா

புது டெல்லி,ஜூலை.- 10 - சமையல் எரிவாயு விலை ரூ. 800 ஆகப் போகிறதாம். இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனால் குடும்பத் தலைவிகளின் பாடு இனி திண்டாட்டம்தான்.  மத்திய அரசு வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு மீது மானியம் வழங்குகிறது. 14.5 கிலோ கொண்ட சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 395 வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு கூறியே பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது. கடைசியாக டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. சமையல் எரிவாயு விலையில் ரூ. 50 உயர்த்தப்பட்டது. இது குடும்ப தலைவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் மாநில அரசுகள் அதன் வரியை குறைத்தன. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 404 ஆனது. இப்படிப்பட்ட நிலையில் சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை வெகுவாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே வருடத்திற்கு 8 சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு யோசித்து வந்தது. இந்த எண்ணத்திலும் இப்போது மண் விழுந்துள்ளது. வருடத்திற்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சிலிண்டர் விலை ரூ. 800 ஆக இருக்கும். வருடத்திற்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே ரூ. 400 க்கு வாங்க முடியும். ஒரு சில குடும்பத்தினர் அடிக்கடி சிலிண்டர்களை பதிவு செய்து அவற்றை ஓட்டல்களுக்கு விற்று விடுவதாக புகார் வந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த புதிய திட்டம் பரிசீலிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்