முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் யார்?

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை 17 - மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரின் உரிமையாளரை கண்டுபிடிப்பதில் மும்பை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மும்பையில் கடந்த 13 ம் தேதி தாதர், ஜாவேரி பஜார், ஓப்ரா ஹவுஸ் ஆகிய மூன்று இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 130 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மகாராஷ்ட்ர தீவிரவாத தடுப்பு போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு பாதுகாப்பு ஏஜென்சிகளின் அதிகாரிகளைக் கொண்ட 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

ஓப்ராஹவுஸ் குண்டுவெடிப்பு சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டர் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்திருக்கலாம்  என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த ஸ்கூட்டர் யாருக்கு சொந்தமானது என்பதை கண்டறிவதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவைத்த தீவிரவாதிகளில் ஒருவன் கொல்கத்தா அல்லது கான்பூர் ரயிலில் தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் கான்பூர்- மும்பை, கொல்கத்தா- மும்பை ஆகிய ரயில்களில் கடந்த ஒரு வாரத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகளின் பெயர்ப் பட்டியல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தீவிரவாதிகள் இந்த இரு ரயில்களில் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள போலீசாரின் உதவியை மும்பைப் போலீசார் நாடியுள்ளனர்.  

மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களை பற்றிய விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். ஓரளவுக்கு முக்கிய துப்பு கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்றும் மும்பை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்