இலங்கை அரசுக்கு கெடு விதிக்கவில்லை: தமிழ் தேசிய கூட்டமைப்பு

Image Unavailable

 

கொழும்பு, ஆக.9 - தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண இலங்கை அரசுக்கு கெடு எதையும் விதிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டணி அமைப்பின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இலங்கை அரசுக்கு நாங்கள் கெடு எதையும் விதிக்கவில்லை. அதிகாரப்பகிர்வு தொடர்பாக 3 பிரச்சனைகள் மீது உங்களுடைய கருத்துக்கள் என்ன என்று எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று பேச்சு தொடங்குவதற்கு முன்பு தெரிவித்தோம். அந்த கருத்துக்களை 2 வாரங்களுக்குள் தெரிவியுங்கள் என்று கேட்டிருந்தோம். நாங்கள் முன்வைத்த மூன்று பிரச்சனைகள், 1. எதிர்கால அரசு எப்படி இருக்கும். 2. மத்திய அரசும் மாநில அரசுகளும் எப்படி அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளும். 3. மத்திய, மாநில அரசுகளிடையே நிதி நிர்வாக அதிகாரம் எப்படி பகிர்ந்துகொள்ளப்படும் என்று தெரிவிக்குமாறு கேட்டோம். 

10 சுற்றுக்கள் பேசியிருக்கிறோம். இதன் பிறகும் அரசு இந்த பிரச்சனைகள் தொடர்பாக தங்களுடைய கருத்து என்ன என்பதைத் தெரிவிக்காமலிருக்கும் பட்சத்தில் இந்த பேச்சுவார்த்தையால் எந்த பயனும் இல்லை என்பதை 10 வது சுற்று பேச்சுவார்த்தையின்போது அதாவது ஆகஸ்ட் 4 ம் தேதி தெரிவித்தோம். அதிகாரப் பகிர்வு குறித்து அரசின் கருத்து என்ன என்பதை ஏப்ரல் 29 ம் தேதி தெரிவிக்கிறோம் என்றார்கள். இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் கால வரம்பு நிர்ணயித்துக்கொண்டு பேசுவோம் என்று சொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி ஏதும் தோன்றவில்லை. இதில் காலக்கெடு எதுவும் இல்லை. அவர்கள் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் எங்களது 3 கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அளிக்கட்டும். 

ஆனால் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்று இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ