முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மீது ஐக்கிய ஜனதாதளம் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.9 - ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்திற்கு காங்கிரஸ் பாதுகாப்பு கொடுக்கிறது என்று ஐக்கிய ஜனதாதளம் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் நடந்துள்ள முறைகேடுகளில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் சம்பந்தப்பட்டுள்ளார் என்று தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதனையொட்டி ஷீலா தீட்ஷித், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் பாரதிய ஜனதா கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாராளுமன்ற இருசபைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. 

இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஷீலா தீட்ஷித்திற்கு காங்கிரஸ் பாதுகாப்பு கொடுக்கிறது என்று ஐக்கிய ஜனதாதளம் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. காக் அறிக்கைக்கு பின்னர் ஷீட்சித்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். ஆனால் அவரை காங்கிரஸ் பாதுகாத்து வருகிறது என்று ஐக்கிய ஜனதாதளத்தின் டெல்லி மாநில பொதுச்செயலாளரும் தலைமை செய்தி தொடர்பாளருமான பிரபாத் ரஞ்சன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். முதலில் சுங்குலு கமிட்டியானது ஷீலா தீட்ஷித் மீது குற்றஞ்சாட்டியது. அதனையடுத்து காக் குற்றஞ்சாட்டியுள்ளது. பல காண்ட்ராக்ட்களுக்கு கூடுதலாக ஏலம் நிர்ணயம் செய்து தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று காக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த தொகையை பறிமுதல் செய்து வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் ரஞ்சன் கோரியுள்ளார். 

இதற்கிடையில் ஷீலா தீட்ஷித் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காக் அறிக்கையை வைத்து மட்டும் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த அறிக்கையை பாராளுமன்ற பொது கணக்கு குழுவோ அல்லது புலன் விசாரணை குழு ஒன்று விசாரணை நடத்தி ஒரு முடிவுக்கு வந்த பின்னரே ஷீலா தீட்ஷித் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்