முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி தேர்தல் அதிகாரியை மிரட்டுவதா? மு.க.அழகிரிக்கு - செல்லூர் ராஜூ கண்டனம்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.- 29 - மத்திய அமைச்சர் பதவியை பயன்படுத்தி மதுரை மாநகராட்சி தேர்தல் அதிகாரியை மிரட்டுவதா என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.   மதுரை திமுக மேயர் வேட்பாளர் பாக்கியநாதன் மனு தாக்கல் செய்த போது உடன் சென்ற  மத்திய மந்திரி மு.க.அழகிரி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜனிடம் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர் என்று புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா,மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ ஆகியோர் நேற்று மதுரை நகர் முழுவதும் திமுகவினரால் வரைந்து சுவர் விளம்பரம் செய்துள்ள புகைப்படங்களை பத்திரிகையாளர்களிடம் காட்டி இதுவே திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கான ஆதாரம் என்று தெரிவித்தனர். தேர்தல் விதிமுறைகளை ஒவ்வொரு முறையும் மீறி நடப்பது திமுகவினர்தான். அவர்கள் அதிமுக மீது புகார் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தனர்.    இதுகுறித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுக வேட்பாளர் வேட்பு மனு போது நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி மு.க.அழகிரி மதுரையில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதை போல ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி மு.க.அழகிரி பேசியுள்ளார். அப்படி பேசிவிட்டு திமுக வேட்பாளர் மனு தாக்கலின் போது தேர்தல் அதிகாரியிடம் உங்களை தனியாக சந்திக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களையும் விரட்டி விட்டு ஏற்கனவே இருந்த அதிகார தோரணையில் மிரட்டி உள்ளார். இந்த செயலை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கடுமையாக கண்டிக்கிறது.     மதுரை நகரில் சுவர் விளம்பரங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர்தான் வரைந்துள்ளனர். ஏற்கனவே நடந்த திமுக ஆட்சியில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தது மு.க.அழகிரிதான். ஆனால் இப்போது புலி சைவமாக மாறியதை போல அவர் பழைய திமிரில் பேசியுள்ளார். நகரில் பல இடங்களில் திமுக சின்னம் வரைந்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் மறைத்து விட்டு முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை காட்டி இது தேர்தலுக்காக எழுதப்பட்டதாக அழகிரி பொய் புகார் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் மதுரை மக்களை கொள்ளையடித்து சுரண்டி பல்வேறு சமூக விரோத செயல்களை செய்து நிலங்களை அபகரித்து மதுரை மக்களை மிரட்டி வந்த மு.க.அழகிரியும் அவரது கூட்டாளிகளும் தற்போது நல்லவர்களை போல நடித்து வருகிறார்கள்.     மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் நடத்தி வருகிறார். கடந்த ஆட்சியில் விதிமுறைகளை மீறி, சட்டதிட்டங்களை மீறி செயல்பட்டவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள். ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசாத மு.க.அழகிரி அதிமுகவினர் மீது குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் தலைமையிலான திமுக அப்புறப்படுத்தப்பட்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மலர வேண்டும் என்று கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தாமாக வாக்களித்து ஒரு மகத்தான வெற்றியை தந்தார்கள். அதே வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவிற்கு கிடைக்கும். நூற்றுக்கு நூறு சதவீதம் மதுரை மேயராக ராஜன்செல்லப்பா வெற்றிபெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்